என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை சென்ற நவம்பரில் வெளியிட்டேன். பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி. விடைகளையும் விளக்கங்களையும் இங்கே அளிக்கிறேன்.

குறுக்காக:
3.நீங்காத முதலுக்கு வாடகை கட்டி நடுவில் குழப்பி யாசிக்கட்டுமா? (1, 4)
விடை: கை நீட்டவா
விளக்கம்: ‘நீங்காத’ வின் முதலெழுத்து ‘நீ’ + வாடகை + ‘கட்டி’ நடுவில் இருப்பது ‘ட்’ – குழப்பினால் வரும் விடை ‘யாசிக்கட்டுமா’ என்ற பொருளில் இருக்கும்.
6.பட்டு மெத்தையில் சரிகை வேட்டியுடன் பாதி கட்டில் சுற்றிப் படு (4)
விடை: பகட்டு
விளக்கம்: பாதி ‘கட்டில்’ = ‘கட்’. அதைச் சுற்றி ‘படு’ = பகட்டு. ‘பட்டு மெத்தையில் சரிகை வேட்டியுடன்’ இதன் நேர் பொருள்.
7.ஏழு தலை ஏப்பம் விட்டு கடைசியில் வருமோ வாசனை (4)
விடை: மோப்பம்
விளக்கம்: ‘ஏழி’ன் தலை ‘ஏ’. ‘ஏப்பம்’ விட்டு ‘ஏ’ போனால் ‘ப்பம்’. ‘வருமோ’ வின் கடைசி எழுத்து ‘மோ’. ‘மோ’ + ‘ப்பம்’ = மோப்பம். ‘வாசனை’ இதன் நேர் பொருள்.
8.முந்தையவனே இடம்பெயர் இங்கிருந்து (3, 3)
விடை: அண்ணா நகர்
விளக்கம்: ‘இங்கிருந்து’ என்பதால் விடை ஒரு இடத்தைக் குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும். ‘முந்தையவனே’ = ‘அண்ணா’. ‘இடம்பெயர்’ = ‘நகர்’
13.அந்த ஆளை உலர வை, பின்னர் கொடியிலிருந்து பறி (6)
விடை: அவரைக்காய்
விளக்கம்: ‘அந்த ஆளை’ = ‘அவரை’. ‘உலர வை’ = ‘காய்’.
14.பேசும் மொழி தமிழா தெலுங்கா? (4)
விடை: செப்பும்
விளக்கம்: ‘பேசும்’ இதன் நேர் பொருள். ‘செப்பு’ என்பது தெலுங்கிலும் பயன்படுத்தப் படுகிறது.
15.மயான ஓரங்களில் கொஞ்சம் துயரமா, வருந்துகிறேன் இதயப்பூர்வமாக (4)
விடை: மனமார
விளக்கம்: ‘மயான’ ஓரங்களில் இருப்பது ‘ம’ + ‘ன’. ‘துயரமா’ வில் கொஞ்சம் ‘ரமா’. ‘இதயப்பூர்வமாக’ இதன் நேர் பொருள்.
16.யானை வாய் திறக்க ஊஞ்சலோ பாதியில் நிற்க இங்கே வேண்டியது அறிவுரையா? (5)
விடை: ஆலோசனையா
விளக்கம்: ‘யானை’ + ‘ஆ’ (வாய் திறக்க) + ‘ஊஞ்சலோ’ வின் பாதி ‘சலோ’. ‘அறிவுரையா’ இதன் நேர் பொருள்.

நெடுக்காக:
1.’ஒன்று ஆறினால் நலம், ஒன்று ஆறாவிட்டால் நலம்’ என்று சீறு. (3, 2)
விடை: கோபம் அடை
விளக்கம்: ‘கோபம்’ = ஆறினால் நலம். ‘அடை’ = சூடாயிருந்தால் நலம். ‘சீறு’ இதன் நேர் பொருள்.
2.வாழைப்பழம் அரை ரூபாயா? சீப்பாக இருக்கிறதே! (5)
விடை: எட்டணாவா
விளக்கம்: ‘அரை ரூபாயா’ வின் நேர் பொருள். (மற்ற குறிப்புகள் விடைக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்துவிட்டன.)
4.முற்றிய பதநீர் மோர்மிளகாயுடன் சுவைத்தால் வெப்பம் தணிக்கும் (2, 2)
விடை: நீர்மோர்
விளக்கம்: விடை இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கிறது.
5.தென்னாட்டில் காந்தி இருந்த இடம் ஆங்கிலத் தலையைச் சுற்றியதா? (4)
விடை: டர்பன் (Durban)
விளக்கம்: ‘தென்னாடு’ = தென்னாப்பிரிக்கா. ஆங்கிலத்தில் Turban தலையில் சுற்றுவது.
9.பார்கவ் வந்ததும் பாமரேனியன் பாய்ந்தது நக்க அல்ல (3)
விடை: கவ்வ
விளக்கம்: விடை ‘பார்கவ் வந்ததும்’ என்ற இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கிறது.
10.கானம் நடுவில் மாட்டிக்கொள்ளாது குழம்பியது (5)
விடை: சிக்கானது
விளக்கம்: ‘கானம்’ நடுவில் ‘ன’ + ‘மாட்டிக்கொள்ளாது’ = ‘சிக்காது’. ‘குழம்பியது’ இதன் நேர் பொருள்.
11.சுருட்டி வைக்கக் கூடிய கட்டையோ?(5)
விடை: பாய்மரம்
விளக்கம்: ‘சுருட்டி வைக்கக் கூடியது’ = ‘பாய்’. கட்டை = ‘மரம்’.
12.அம்புலிக்குப் போனது, ஆம்புலன்சிலும் போகமுடியுமோ? (4)
விடை: அப்போலோ/அப்பலோ
விளக்கம்: நிலவுக்குப் போன விண்கலம். மருத்துவமனையும் கூட.
13.மாமாவை அழைக்கவா விளையாட? ஆனால் பால் சரியில்லையே.. (4)
விடை: அம்மானை
விளக்கம்: ‘மாமா’ = ‘அம்மான்’. அம்மானை பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. மாமாவின் பால் ஆண்பால் ஆயிற்றே.

Sorry, the comment form is closed at this time.

 
© 2012 புதிர்மயம் Suffusion theme by Sayontan Sinha