எல்லாம் புதிர்மயம்!

'ஹிந்து'-வில் வரும் ஆங்கிலக் குறுக்கெழுத்துப் புதிர்களை எப்படி அவிழ்ப்பது என்று கல்லூரி செல்லும் காலங்களில் கற்றுக்கொண்டேன். தமிழில் அது போல இல்லாத குறையை வாஞ்சி அவர்கள் 'தென்றல்' இதழின் மூலமாக பத்து வருடங்களுக்கும் மேலாக தீர்த்து வருகிறார். இணையத்தின் மூலமாக அதனைப் படிக்கும்போது கணினியின் மூலமாகவே பதில்களை முயல முடியாதது ஒரு குறையாகவே இருந்தது. 'பிரிண்ட்' எடுப்பதற்கு ஒரு சோம்பேறித்தனம் அல்லது பிரிண்டரில் முக்கால்வாசி நேரம் மை இல்லாத நிலைமை. 2011-இன் ஆரம்பத்தில் பார்த்தசாரதி அவர்களின் 'அபாகு' புதிர்கள் எனக்கு அறிமுகமாயின. அதில் இணையப்பக்கத்திலேயே ஒவ்வொரு எழுத்தாக 'கட் அண்ட் பேஸ்ட்' செய்யும் விதத்தில் அமைத்திருந்தார். யோசிப்பவர் மற்றும் இலவசக்கொத்தனார் அவர்களின் புதிர்களிலும் பதில்களை டைப் செய்யக் கூடியதாக அமைத்திருந்தனர். ஆனால் கணினியில் ஏதானும் ஒரு வகை தமிழை நேரடியாக டைப் செய்யக் கூடிய செயலி ஏற்கனவே இருந்தால்தான் அப்படி முயல முடியும். தமிழ்ப் புதிர் பிரியர்கள் எல்லாருமே அத்தகைய செயலிகளை வைத்திருப்பார்களா என்பது எனக்கு சந்தேகமாய் இருந்தது. அதுவும் இந்தக் காலத்தில் ஒருவர் பயன்பாட்டில் பல கணினிகள் இருப்பது வழக்கமாய் இருக்கிறது. ஒன்றிரண்டு லேப்டாப்புக்கள், ஒன்றிரண்டு டெஸ்க்டாப்புக்கள், அலுவலக கணினிகள் என்று அப்படி எல்லாவற்றிலும் அத்தகைய செயலிகள் இருப்பது இன்னும் அரிதே. கூகுளின் 'ஜிமெயில்'-இல் எந்த சிறப்பு செயலியும் இல்லாமலே தமிழில் எழுத முடிவது மிகவும் எளிதாக இருந்தது. அது போல தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்களை அவிழ்ப்பது எளிதாக இருக்கவேண்டும் என்ற அவாவின் காரணமாக உருவானது தான் 'புதிர்மயம்'. அதன் பிறகு எனக்கும் ஒரு புதிர் உருவாக்கவேண்டும் என்ற ஆசை வந்ததால் அதனைச் சுலபமாகும் வகையில் அதற்கும் ஒரு செயலி உருவாக்கினேன். சுவையான புதிர்களை உருவாக்கக்கூடிய திறமைசாலிகள் பலர் கண்டிப்பாக இருக்கிறார்கள். ஆனால் அதனை இணையத்தில் எவ்வாறு செயல்பட வைப்பது என்று தெரியாதது, அத்திறமையை மறைக்க ஒரு காரணமாக இருக்க வேண்டாம் என்பதும் ஒரு எண்ணம். பார்த்தசாரதி, பூங்கோதை, மனு, யோசிப்பவர்் முதலியோர் குறுக்கெழுத்து மட்டுமல்லாது இன்னும் பல புதிய வகைப் புதிர்களை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். சொல்கலை, குறள்வளை, சொல்லாங்குழி, கலைமொழி என்று அருமையான பெயர்களுடன் அவை பிறந்து நன்றாக வளர்ந்து வருகின்றன. அத்தகைய புதிர்களையும் இந்த புதிர்மயம் தளத்தில் வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.

அன்புடன்,
ஹரி

© 2012 புதிர்மயம் Suffusion theme by Sayontan Sinha